துணைவேந்தர் பதவி
Published On 01/09/2025
English | தமிழ் | සිංහල

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை
துணைவேந்தர் பதவி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவை 1978 ஆம் ஆண்டைய 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 34ஆம் பிரிவு மற்றும் அதன் பின் வந்த திருத்தங்களின் பேரில் செயற்படுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்களைக் கோரி அழைப்பு விடுக்கின்றது. பதவிக்கான தெரிவு 03/ 2023 இலக்க 10.04.2023 திகதிய சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள முறையில் இடம்பெறும் என விண்ணப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளவர்களுக்கு இத்தால் அறியத்தருகின்றேன். விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வலைத்தளத்தின் இணைப்பிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். பதவிக்கு நியமனம் செய்யப்படும் விண்ணப்பதாரி இலங்கைப் பிரஜையாகவும் 63 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பதவிக்கு நியமனம் செய்யப்படும் விண்ணப்பதாரி நியமனம் பெற்ற தினத்திலிருந்து மூன்று வருடங்களுக்கு அல்லது அவர் தனது 65 வயதைப் பூர்த்தி செய்யும் நாள் வரைக்கும் இவ்விரண்டில் எது முன்வருகின்றதோ அது வரை பதவி வகிப்பார்.
கற்பித்தல், கற்றல், ஆராய்ச்சி மற்றும் புதுமை, புலமைப்பரிசில் மற்றும் சமூக ஈடுபாடு புலமைத்துவம் என்பவற்றுக்கான உன்னத நிலையங்களுள் தலையாயதாக விளங்குவதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்நோக்காகும். உயர்கல்வியின் தரநிலையை உயர்த்துவதும் பொதுவாக நாட்டினதும் குறிப்பாக வடமாகாணத்தினதும் அபிவிருத்திக்கு பொருந்திவரக் கூடிய ஆராய்ச்சியை ஊக்குவிப்பதும் அதன் முன்னுரிமைகளாம். இப்பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் ஒன்பது பீடங்களையும் கிளிநொச்சியில் மூன்று பீடங்களையும் (எல்லாமாக 12 பீடங்களை) கொண்டமைந்து ஏறத்தாழ பதின்நான்காயிரத்து முந்நூறு பட்டதாரி மாணவர்களையும் ஆயிரத்து முந்நூறு உயர் பட்டதாரி மாணவர்களையும் கொண்ட தொகையினருக்கு தொழில்சார் மற்றும் சான்றங்கீகாரமளிக்கப்பட்ட பட்டப்படிப்பு நெறிகளை வழங்கி வருகிறது. துணைவேந்தர் இந்நடவடிக்கைகளுக்கு வலுவூட்டித் துணை புரியமாறு எதிர் பார்க்கப்படுகிறார்.
- துணைவேந்தர் தனது அறிவுசார் வாண்மை மற்றும் மேலாண்மை என்பவற்றின் பிரகாசிப்பினூடாக பல்கலைக்கழத்தின் உயர்நோக்கு மற்றும் அதன் இலக்குகளை முன்னெடுத்து செல்வதற்கு ஏற்ற வகையில் ஒரு உயர் நோக்கு உடையவராக இருத்தல் வேண்டும். மேலும், துணைவேந்தர் உயர்கல்விக்கான தேசியக் கொள்கைகள் தொடர்பில் தேசத்தின் தேவைகளை இனங் காண்பதற்;கு அழைப்பு விடுக்கப்படுபவராகவும் உள்ளார். அவர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளடங்கலாக அவரது தலைமைத்துவம் மற்றும் கல்விசார் நடவடிக்கைகளினூடாக பல்கலைக்கழகத்தை முன்னேற்றுவதற்காகக் காலத்தால் பரீட்சிக்கப்பட்ட விழுமியங்ளைப் பலப்படுத்த வல்லவராகவும் இருத்தல் வேண்டும். எனவே விண்ணப்பதாரி கல்வியில் மீயுயர் நிலையும், நாணயமும் வலிமையான ஆராய்ச்சிப் பின்புலத்தோடு கூடிய தலைசிறந்த சாதனைகளுக்கு உரித்துடையவராகவும், பலதிறப்பட்ட ஆர்வக் குழுக்களுடன் அறிவார்ந்த நிலையில் தொடர்புறுவதற்காக நிரூபிக்கப்பட்ட தலைமைத்துவ பண்புகளையும் ஆட்தொடர்பாடல் திறன்களையும் கொண்டவராகவும், கொள்கை விடயங்களில் ஒரு தெளிவான புரிதல் உடையவராகவும், மாணவர் மற்றும் ஊழியர் ஆகியோரின் பல்திறப்பட்ட ஈடுபாட்டைத் தூண்டக்கூடிய வல்லமையுடன் கூடிய உன்னதமான தொடர்பாடற்திறன்களையும் தீர்மானங்களைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதில் பற்றுறுதியும் கொண்டவராகவும் விளங்குமாறு எதிர்பார்க்கப்படுகிறார்.
துணைவேந்தர் முழுநேர உத்தியோகத்தர் என்பதோடு அவரே பிரதம நிறைவேற்று அதிகாரியும், பிரதம கல்விசார் அதிகாரியும் ஆவார். துணைவேந்தரே பிரதம கணக்கீட்டு அதிகாரியும் ஆவார். பல்கலைக்கழகப் பேரவை மற்றும் மூதவை என்பவற்றின் பதவி வழி உறுப்பினரும் தலைவரும் அவரே ஆவார். பல்கலைக்கழகத்துள் ஒழுக்கத்தை பேணும் பொறுப்பு அவருக்குரியது. பல்கலைக்கழகத்தின் சட்டமும் அதன் எந்தவொரு பொருத்தமான கருவியும் விதித்துரைத்தவைகள் முறையாகப் பேணப்படுவதனை உறுதி செய்தல் துணைவேந்தரின் கடமை என்பதனால் அந்த நோக்கத்திற்காக அவர் அவசியம் என்று கருதத்தக்க எல்லா அதிகாரங்களையும் பயன்படுத்துதல் வேண்டும்.
துணைவேந்தர் கல்விக்கான தலைமைத்துவத்தை வழங்கல், ஆற்றொழுக்கான வகையில் அமையுமாறு மேலாண்மைக்கான கொள்கைகளை உருவாக்குதல், அறிமுகப்படுத்தல், நடைமுறைப்படுத்தல் என்பவற்றோடு பேரவைத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல், பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாகம் என்பவற்றுக்குப் பொறுப்பானவர் என்பதனால் கல்வியில் உன்னதம், நல்லாட்சி ஆகிய கோட்பாடுகளை உயர்த்திப் பிடிப்பவராக இருத்தல் வேண்டும். வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறும் தகைமை, ஜனநாயக மேலாண்மை மற்றும் சார்புநிலையற்ற திறமிகு தலைமைத்துவம் என்பவற்றையும் நிலைநிறுத்தும் பொறுப்பும் துணைவேந்தருக்குரியது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகும் விருப்புடையவர் கடினமானதும், நெருக்கடியானதும், சடுதியான நிலைமாறுதல்களை உடையதுமான சூழ்நிலைகளை தன் திறனாற்றல் மற்றும் சாதுர்யத்தின் மூலம் திறம்படக் கையாளக் கூடியவராக இருத்தல் வேண்டும். கைக் கொண்ட காரியத்தின் தன்மையைப் பொறுத்து நெடுமணி நேரம் பணியாற்றக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும்.
துணைவேந்தர் பல்கலைக்கழக முறைமையில் கல்விசார் சம்பள அளவுத்திட்டத்தில் அதியுயர் நிலையில் வைக்கப்படுவதற்கு உரித்துடையவர் என்பதோடு அதன்மேல் அச்சம்பளத்தின் 15% இனை உபசரிப்புப் படியாகப் பெறுவதற்கும் உரித்துடையவராவார்.
- விண்ணப்பங்கள் கீழ்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
- பிறந்த திகதியையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான சுயதகைமை விபரப் பட்டியல்.
- விண்ணப்பதாரி பல்கலைக்கழக அபிவிருத்திக்கான உயர் நோக்குக்கான கூற்றுடன் அவர் நியமிக்கப்படும் பட்சத்தில் தான் அடைய முன்மொழிவன பற்றியதொரு சுருக்கமான விளக்கம்.
- தற்போது இப் பதவியை வகிப்பவர் அல்லது முன்னர் இப்பதவியை வகித்தவர் விண்ணப்பதாரி எனின் அவர் தான் தன்னுடைய முன்னைய பதவிக்காலத்தில் சாதித்தவை பற்றியும் எதிர் காலத்திற்கான திட்டங்கள் பற்றியும் கோடிட்டுக் காட்டும் வகையிலான அறிக்கையொன்றைக் கையளிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரி அரச பொதுத்துறை, கூட்டுத்தாபனங்கள்இ நியதிச்சபைகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தவிர்ந்த ஏனைய உயர்கல்வி நிறுவனங்கள் என்பவற்றில் யாதாவதொன்றில் சேவை புரிபவராயின் அவர் இப்பதவிக்கு நியமிக்கப்படுவாராயின் அவர் விடுவிக்கப்படமுடியுமா என்பதனை அறியத்தரும் பொருட்டு தொழில் கொள்வோரிடமிருந்து ஒரு கடிதம்.
விண்ணப்பங்கள் ‘பேரவைச் செயலாளர், பதிவாளர் அலுவலகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்’ என முகவரியிட்டு மூடிய கடித உறையில் 15.10.2025 அன்று பி.ப 3.00 மணிக்கு முன்னதாகக் கிடைக்கக் கூடியதாகப் பதிவுத்தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படவோ நேரடியாகக் கையளிக்கப்படவோ கூடும். கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் ‘துணைவேந்தர் பதவி’ எனக் குறித்திருக்க வேண்டும்.
மேலதிகமாக, மேலே உள்ள ஆவணங்கள் மற்றும் கையடக்க ஆவண வடிவமைப்பு (PDF) வடிவத்தில் உள்ள வேறு ஏதேனும் துணை ஆவணங்களின் மென்பிரதி எனது மின்னஞ்சல் முகவரி: registrar@univ.jfn.ac.lk இற்கு 15.10.2025 அன்று முடிவடைவதற்கு முன் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
-
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை இல. 03/2023 இல் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, விண்ணப்பங்கள் முடிவு திகதியிலிருந்து இரு மாதங்களுக்குள் மதிப்பீட்டிற்காக மற்றும் நேர்காணலுக்காக பேரவை செயலாளரினால் சிறப்பு பேரவைக் கூட்டம் வேலை நாள் ஒன்றில் கூட்டப்படும். ஒரு விதிவிலக்கான சூழ்நிலையில், எந்தவொரு விண்ணப்பதாரரும் சிறப்பு பேரவைக் கூட்டத்திற்கு நேரில் தோன்ற முடியாத நிலையில், செயலாளரிற்குத் தரும் முன்னறிவித்தல் மூலம் நிகழ்நிலையில் (virtual mode) தோன்ற அனுமதிக்கப்படுவார்.
ஒரு சுருக்கமான 10 நிமிடங்களுக்குக் குறையாததும் 15 நிமிடங்களுக்கு மேற்படாததுமான விளக்கக் காட்சியை நிகழ்த்துவதற்கு விண்ணப்பதாரர்கள் சிறப்பு பேரவைக் கூட்டத்திற்கு முன் அழைக்கப்படுவார்கள். ஆயினும் எந்தவொரு வேட்பாளரும் அவ்வேட்பாளர் பேரவை உறுப்பினராய் இருந்தாலும் கூட வேறொரு வேட்பாளரின் விளக்கக்காட்சியின் போது பங்குபற்றுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்.
விசேட பேரவைக் கூட்டத்தின் அறிக்கையொன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை 03/2023 இன் படி மூன்று பெயர்களை விதந்துரைக்கும்படி தயார்செய்யப்பட்டு அனைத்து ஆவணங்களுடனும் இணைத்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு மேலதிக நடவடிக்கைகளுக்காக முன்வைக்கப்படும்.
முடிவு நாளுக்குப் பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் கருத்திற்கொள்ளப்படா.
விசுவநாதன் காண்டீபன்
பதிவாளரும் பேரவையின் செயலாளரும்
பதிவாளர் அலுவலகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
திருநெல்வேலி
01.09.2025