பேராசிரியர்த்துவ உரை
Published On 10/01/2023
11ம் திகதி மாலை 3.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக மண்டபத்தில் பேராசிரியர்த்துவ உரை ஒன்று நடைபெறவுள்ளது. கல்விப்புலமையில் துறை போந்த கல்விமான்கள் பேராசிரியராக தரமுயர்த்தப்படுவது அவர்கள் வாழ்வில் ஒரு சிறப்பு மிக்க தடம். இதனைக் குறித்து பேராசிரியர்த்துவ உரையை பேராசிரியராக நிலையுயர்த்தப்பட்ட கல்லிமான்கள் நிகழ்த்துவது ஒரு உயர்வணி மரபாகும். இவ்வரிசையில் இம்முறை பேராசிரியர்த்துவ உரையை நுண்கலைத்துறைத்தலைவரும் கலைவரலாறு இருக்கைப் பேராசிரியருமாகிய திரு.தா.சனாதனன் அவர்கள் ‘நினைவை எவ்வாறு கீறுவது: ஆய்வு முறையாகக் கலை’ என்ற தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.
‘முரண்பாட்டின்போது அனைவராலும் அனுபவிக்கப்பட்ட துன்பம் மற்றும் வலியினை அங்கீகரித்தல் என்பது நீதியான சமாதானத்தின் முக்கிய அம்சமாகும். இதனடிப்படையில் போர்க்கால நினைவையும் மறதியையும் வரைபடமாக்கல் என்பதுடன் அதனுடன் பிணைந்துள்ள உணர்ச்சியையும் அனுபவத்தினையும் சேகரித்தல், பதிவு செய்தல்இ பகுப்பாய்தல், பிறருடன் பகிர்ந்து கொள்ளல் என்பதற்கான கருவியாக அல்லது முறையாகக் கலையைப் பயன்படுத்தும் சாத்தியப்பாடுகளையும் எல்லைப்பாடுகளையும்’ கலந்துரையாட இவ்வுரை முயல்கிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நீண்ட காலத்திற்குப் பின் பேராசிரியர்த்துவ உரை நடைபெறவுள்ளதென்பதனால் ஆர்வலர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.