உடற்கல்வி டிப்ளோமாக் கற்கை நெறி ஆரம்ப அறிமுக நிகழ்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி டிப்ளோமாக் கற்கை நெறி ஆரம்ப அறிமுக நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சி. சபானந் தலைமையில், கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, இணை மருத்துவ விஞ்ஞானபீடாதிபதி தெய்வி தபோதரன், விளையாட்டு விஞ்ஞான அலகின் தலைவர், சிரேஷ்டவிரிவுரையாளர் கலாநிதி கு. கேதீஸ்வரன் ஆகியோர் விருந்தினர்களாக் கலந்து கொண்டனர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், போதனாசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் கற்கை நெறிக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர். பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீடத்தின் கீழ் உடற்கல்வி விஞ்ஞானமாணிக் கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இணை மருத்துவ விஞ்ஞான பீடத்தின் கீழ் விளையாட்டு விஞ்ஞானஅலகு, புதிய துறையாக உள்வாங்கப்பட்டுள்ளது.