News

பன்முக ஆளுமை கொண்ட நிர்வாகி கலாநிதி குணராசா

kunarasa
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளராகிய பன்முக ஆளுமை கொண்ட நிர்வாகி கலாநிதி குணராசா (செங்கை ஆழியான்) அவர்கள் 28 பெப்ரவரி 2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் மறைவு தொடர்பாக பல்கலைக்கழகப் பதிவாளர் காண்டீபன் அவர்களின் இரங்கல் செய்தி.

எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சந்தித்த பதிவாளர்களுள் பன்முக ஆளுமை கொண்ட பதிவாளராக கலாநிதி குணரசா அவர்களை இனம் காணமுடியும். இலங்கை நிர்வாக சேவையின் திறன்மிக்க அதிகாரியான அவர் அத்துறையில் இருந்து முறைவிடுப்புப் பெற்று நமது பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பதவியைப் பொறுப்பேற்று அதனை 1997 ஆம் ஆண்டிலிருந்து திறம்பட ஆற்றியவர். இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முதலில் கலாநிதிப்பட்டம் பெற்று கடமையாற்றிய பதிவாளராக அவர் திகழ்ந்தார்.

அவரது நிரம்பிய நிர்வாக ஆளுமையினாலும் ஆழமான கல்விப் புலம் சார்ந்த அறிவாலும் இலக்கியத் துறையில் அவரின் வீச்சினாலும் பதிவாளர் பதவிக்கு பெருமை சேர்த்தவர் அவர். பதிவாளர் பதவிக்கு தேவையான தகமைகளில் இரட்டைத் தகமைகளை ஒருங்கே கொண்டவர்; அத்தகைய உயர் ஆளுமை மிக்க மனிதரை இன்று நாம் இழந்திருக்கின்றோம்.

செங்கையாழியான் எனும் புனைபெயரினால் இலக்கிய உலகில் ஆழமான அழுத்தமான பதிவுகளைத் தந்தவர் அமரர் அவர்கள். அவரது இலக்கிய பதிவுகள் ஒவ்வொன்றும் நம் வரலாற்றைப் பதிந்த முயற்சிகள். ஒருகாலத்தை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடிகள். ‘வாடைக்காற்று’, ‘யானை’, ‘கங்கைக்கரையோரம்’, ‘கடல்கோட்டை’ எனும் நாவல்கள் நம் மன நாவில் இன்றும் தித்திக்கின்றவை. நாம் மறந்த தொலைத்த ஈழத்தின், குறிப்பாக வன்னிப் பிரதேசத்தின் விருத்தி வரலாற்றின் விவசாய குடியேற்றத் திட்டங்களையும் அம்மாந்தரின் முயற்சி, செயற்திறன், பண்பு, வெற்றி, வீரம், இன்னல்கள், சோகம், என்பவற்றையும் அவை ஒருங்கே அநாயாசமாகப் பிரதிபலித்தன. பலவிடயங்களை நமக்குள் மீட்டுக்கொள்ள அவரது இலக்கியங்கள் இன்று அவசியமாகி விட்டன. அவரே மிகவும் கூடியளவில் எழுதிய ஈழத்து எழுத்தாளர் எனவும் கூறப்படுகின்றார்.

தமிழ் நவீன இலக்கியத்துறையில் தனி அத்தியாயங்களாகத் திகழும் அவரது இலக்கிய செழுமையும் நிர்வாகத் துறையில் நிமிர்ந்த திறனும் பின்வருவோருக்கு வழிகாட்டும் வல்லமை மிக்கன. அவரது நினைவுகளைத் தாங்கி பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எனும் முறையில் எமது பல்கலைக்கழக சமுகத்தின் அஞ்சலிகளைத் தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்திக்குப் பிரார்த்தித்து நிற்கின்றேன்.

வி.காண்டீபன்,
பதிவாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.