News

கிளிநொச்சி வளாகத்தில் புதிய கட்டடங்கள் திறந்து வைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரச நிதியில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட பத்து கட்டடத் தொகுதிகள் எதிர்வரும் 04 ஆம் திகதி சனிக்கிழமை காலை 11.00 மணியளவில்  பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களால் வைபவரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளன. உயர்கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ கலாநிதி விஜேதாச ராஜபக்ச, உயர்கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ மொஹான் லால் கிரேரு ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ள இவ் வைபவம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இரத்தினம் விக்கினேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெறும்.

இவ்வைபவத்தில் உயர்கல்வி அமைச்சின் உயரதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், உப தலைவர் மற்றும் வடமாகாண அரச திணைக்களங்களின் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் முதலானோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகப் பகுதியில் சுமார் 1600 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நான்கு மாணவ விடுதிகள், உத்தியோகத்தர்களுக்கான இரண்டு விடுதிகள், பொறியியல் பீடத்தின் மின்னியல் மற்றும் இலத்திரனியல் துறைக்கான மூன்று மாடிக்கட்டிடம், கணணி பொறியியல் துறைக்கான இரண்டு மாடிக்கட்டிடம், பொறியியல் பீட நிர்வாகப் பிரிவுக்கான மூன்று மாடிக்கட்டிடம் மற்றும் விருந்தினர் விடுதி ஆகிய கட்டடங்கள் பிரதமரினால் திறந்து வைக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பொறியியல்பீடம், விவசாய பீடம் மற்றும் தொழில்நுட்பப் பீடம் ஆகியவை இயங்கி வருகின்றன. இக் கட்டடங்கள் யாவும் சுமார் 2100 மில்லியன் ரூபா செலவில் திறைசேரி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

பதிவாளர்